ஸ்பெஷல் அடை
https://tamilcatering.blogspot.com/2014/04/special-adai.html
ஸ்பெஷல் அடை
இது என்னடா ஸ்பெஷல் அடைதோசை என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். சேர்மானம், பக்குவம் என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும். அதனால் ருசியும் மாறும். எங்கவீட்டில் அடை சாப்பிட்டவர்கள் எல்லொருமே "சூப்பர் " என்றே சொல்லுவார்கள். அதனால் தான் இதை ஸ்பெஷல் அடை என்று குறிப்பிட்டுள்ளேன்.
தேவையான பொருட்கள்
இட்டலி அரிசி = 1 கப்
கடலை பருப்பு =1/2 கப்
துவரம் பருப்பு = 1/2 கப்
மிளகாய்வற்றல் = 4 அல்லது 5. ( தேவையான காரத்திற்கு ஏற்ப)
சாம்பார் வெங்காயம் = 6
அல்லது பெரிய வெங்காயம் 1 அல்லது 2.
இஞ்சி = ஒரு துண்டு
கறிவேப்பிலை.
பெருங்காயம்
தேங்காய் = தேவையான அளவு சிறு சிறு பல்லாக வெட்டிக்கொள்ளவும்
உப்பு.
செய்முறை
இட்டலி அரிசியை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
இதைப்போலவே கடலை பருப்பையும், துவரம்பருப்பையும் சேர்த்து போட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் கிரைண்டர் அல்லது மிக்க்ஸியில் ஊறவைத்த அரிசியை குறைவாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பாதி அறைபட்டவுடன் ஊறவைத்திருக்கும் பருப்பையும் மிளகாய் வற்றலையும் அதோடு சேர்த்து போட்டு அரைக்கவும். அடை மாவு தோசை மாவை விட சிறிது கட்டியாக இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பருப்பு பிறு பிறு என அரை பட்டவுடன் அரைப்பதை நிறுத்தவும். மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை தோலுரித்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டவும்.
இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
தேங்காயை சிறு சிறு பல்லாக தேவையான அளவுக்கு வெட்டவும்.
கறிவேப்பிலையை தேவையான அளவு இலைகளை மட்டும் எடுத்து கிள்ளி வைத்துக்கொள்ளவும்.
இவை எல்லாவற்றையும் மாவில் போட்டு நன்றாக கலக்கவும். அதோடு தேவையான தூள் உப்பை (இந்த அளவு தோசை மாவுக்கு எவ்வளவு உப்பு போடுவோமோ அதே அளவு உப்பை) அடை மாவில் போடவும். அதோடு வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக உப்பு கரையும் வகையில் மாவை நன்றாக கலக்கவும்.
மாவை விரலால் தொட்டு நாக்கில் வைத்து உப்பு, காரம் சரியா இருக்கிறதா என பாருங்கள். இல்லையென்றால் தேவையான உப்பு அல்லது மிளகாய் பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடை கல் அல்லது தோசை கல் நன்றாக சூடானவுடன் அடை மாவை விரும்பும் சைஸ்க்கு ஊற்றி அடை தோசையின் நடுவிலும், சுற்றி நாலைந்து ஓட்டைகளை சட்டகைப்பையின் வால் பகுதியால் போடுங்கள். நல்லெண்ணையை அடை தோசையை சுற்றியும், ஓட்டை போட்ட பகுதியிலும் விடவும். வெந்தவுடன் திருப்பி போடவும். மாவு சிறிது கட்டியாக இருப்பதால் மெல்லிசாக அடை வார்க்க முடியாது. கட்டியாக இருந்தால் தான் ருசியாக இருக்கும். செய்து பாருங்கள்.
இதற்கு எண்ணை ஊற்றிய மிள்காய் பொடி அல்லது சர்க்கரை (சீனி) அல்லது தேங்காய் சட்டனி அல்லது அவியல் சேர்த்து சாப்பிடலாம்.